புதுடில்லி: “நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்துக்கு, போதைப்பொருள் பயங்கரவாதம் பெரிய சவாலாக உள்ளது’ என டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சந்து பேசினார்.
டில்லியில் நேற்று நடந்த போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச மாநாட்டில், துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சந்து பேசியதாவது:
போதைப்பொருள் பயங்கரவாதம் தற்போது தொலைதூர அச்சுறுத்தல் அல்ல. நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்துக்கு பெரிய சவாலாக போதைப்பொருள் மாறி விட்டது. பயங்கரவாத செயல்கள், பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கு சர்வதேச அளவில் போதைப்பொருள் வர்த்தகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வலுவான ஒருங்கிணைப்பு, அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் அமலாக்கத்தைப் போல, போதைப்பொருள் தடுப்பிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
