ஐந்து ஆண்டாக எங்கு சென்றீர்கள்? காங்., எம்.எல்.ஏ.,வை மறித்த மக்கள்

துாத்துக்குடி: தொகுதி எம்.எல்.ஏ.,வான நீங்கள் ஐந்து ஆண்டாக எங்கு சென்றீர்கள், காங். வேட்பாளரை மறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் காங்., – எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியினருடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., இருவப்பபுரம் காடோடிபனை பகுதியில் ஓட்டு சேகரிப்பிற்காக சென்றார்.

அவரின் வருகைக்காக காத்திருந்த கிராம மக்கள் திடீரென வாகனத்தை முற்றுகையிட்டனர். பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம், மக்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்? இந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?’ என கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சிலர் மக்களை சமரசம் செய்ய முயன்றனர். அவர்களை ஒதுங்கி கொள்ளுமாறு கிராம மக்கள் கடுமையான வார்த்தைகளால் பேசினர். ‘எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வராதீர்கள்; தயவு செய்து திரும்பி போய் விடுங்கள்’ என கிராம மக்கள் கையெடுத்து கும்பிட்டு, அவரை அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியதாவது: கடந்த ஐந்த ஆண்டுகளில் முதல் முறையாக எங்கள் ஊருக்கு, இப்போதுதான் எம்.எல்.ஏ., வந்துள்ளார். நாங்கள் போட்டோவில் தான் இவரை பார்த்துள்ளோம். எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கூட ஏற்பாடு செய்யவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link