தனியாக இருந்த பெண்ணிடம் கைவரிசை : 5 பேர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 500 பிளாட் பகுதியில், கடந்த 09.10.2026 அன்று மாலை சுமார் 3.30 மணியளவில், சுல்தானியா (48) என்பவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், வீட்டின் கதவு திறந்திருந்ததைப் பயன்படுத்தி உள்ளே புகுந்து வீட்டில் பணம் மற்றும் நகைகளை எங்கு வைத்துள்ளார் என்றும் கேட்டு மிரட்டி அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர், வீட்டின் சமையலறையில் உள்ள அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 2½ பவுன் நெக்லஸ், 1 பவுன் கம்மல் மற்றும் ½ பவுன் எடையுள்ள நான்கு மோதிரங்கள் என மொத்தம் 5½ பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். 

அப்பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர அங்கிருந்தவர்கள் தப்பித்து சென்று விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கீழக்கரை காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. கீழக்கரை ஆய்வாளர் பத்மநாபன் கீழக்கரை சார்பு ஆய்வாளர் கார்த்திக் மற்றும் குற்றப்பிரிவு தலைமைக் காவலர்கள் யாசர், ராதா, காளி, குமார், வசந்த் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், 120க்கும் மேற்பட்ட  கண்காணிப்பு (CCTV) கேமரா பதிவுகள் ஆராயப்பட்டு  குற்றவாளிகளான கார்த்திக் (34) ஹர்சத் அலி (36) நாகேஸ்வரன் (47) சண்முக மணி (46) ஜான் டேவிட் (39) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை விரைவாகக் கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வெகுவாக பாராட்டினார்.