கேரள மாநிலம், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அக்டோபர் 20-ஆம் தேதி 5 மணி நேரம் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளன. ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் பாரம்பரியமான ‘ஆறாட்டு’ ஊர்வலம் விமான நிலைய ஓடுபாதையைக் கடந்து செல்வதற்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 20-ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான சேவைகள் நிறுத்தப்படும். ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெறும் ‘அல்பாசி ஆறாட்டு’ திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் கோயில் உற்சவ மூர்த்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்குமுகம் கடற்கரையில் புனித நீராடல் சடங்கு நடத்தப்படும். இந்த ஊர்வலம் விமான நிலைய ஓடுபாதையைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
பல ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்
திருவிதாங்கூர் அரச குடும்பத்துடன் தொடர்புடைய இந்தப் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. திருவனந்தபுரம் விமான நிலையம் 1932-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பின்னரும் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாட்டு ஊர்வலத்துக்கு வசதியாக ஆண்டுக்கு இருமுறை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு, விமானங்களின் நேர அட்டவணைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன.
பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அக்டோபர் 20-ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாகப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமானத்தின் புறப்பாடு மற்றும் வருகை நேரங்களில் மாற்றம் உள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விமான நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், விமான நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளைப் பார்த்த பிறகே பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
