தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகப் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்புகளைச் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது
தாராபுரம் தொகுதியில் குடிநீர் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காவேரி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டத்தின் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்கும் வகையில் ரூ. 1,439 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், நீண்டகாலமாக நிலமற்ற ஏழை மக்களுக்கு உதவும் வகையில் 2,700 இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படவுள்ளன.
தாராபுரம் தொகுதியில் உள்ள பாசனக் கால்வாய்களைத் தூர்வாரிச் சீரமைக்க ரூ. 10 கோடியில் திட்டங்கள் தீட்டப்பட்டு, 271 கி.மீ நீளமுள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும். மேலும், மூலனூர் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்படுவதோடு, குண்டடம் மற்றும் தாராபுரம் வட்டாரங்களில் சுமாராக 13,000 புதிய குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளன
மதுராந்தகம் தொகுதியில் புதிய கல்லூரி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அச்சரப்பாக்கத்தில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நலனுக்காக மதுராந்தகம் தொகுதியில் ரூ. 1.80 கோடியில் 6 புதிய நெல் கொள்முதல் நிலையங்களும், ஆத்தூரில் ரூ. 20 கோடியில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய சேமிப்புக் கிடங்கும் அமைக்கப்படவுள்ளது.
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பில் நவீன விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சை பிரிவு தொடங்கப்படவுள்ளது. மேலும், மதுராந்தகம் ஏரியைச் சுற்றுலாத் தலமாக மாற்றும் வகையில் பூங்கா அமைக்கும் பணியும், நகர்ப்புறத்தில் பணிபுரியும் பெண்களுக்காகத் தங்கும் விடுதி மற்றும் அறிவுசார் மையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிவிப்புகள் அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனடியாகக் கொண்டுவரும் வகையில், சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த அதிரடி வளர்ச்சித் திட்டங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
தாராபுரம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் பி. சத்தியபாமா, தி.மு.க வேட்பாளர் எஸ். சுகன்யாவை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க வேட்பாளர் கே. மரகதம் குமரவேல், தி.மு.க வேட்பாளர் ஐ. பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ளார்.
இந்த இரட்டை வெற்றியின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் த.வெ.கவின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது.
