தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து தமிழக அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்த அருண் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கத்துறை ஏடிஜிபியாக இருந்த அபின் தினேஷ் மோதக் புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பதவியில் இருந்து மாற்றப்பட்ட காவல் ஆணையர் அருண், வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
