சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் இன்று (19.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “குற்றம்சாட்டப்படுபவர்களுக்குத் துணைபோவது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம். திமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்போது, சம்பந்தப்பட்ட நபர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என்ற காரணத்தைக் கூறி, திமுகவுக்கு எதிராகப் பெரிய அளவில் ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது.
பலரும் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்றுதான். சம்பந்தப்பட்ட நபர் திமுக நிர்வாகியாக இல்லாத நிலையிலும், அவருடன் தொடர்புபடுத்தி, அந்தப் பணம் திமுகவுக்கு வந்ததாகவும், அதைக் கொண்டுதான் திமுக தேர்தலைச் சந்திப்பதாகவும், கட்சி அரசியலே அந்தப் பணத்தைச் சார்ந்துதான் நடைபெறுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது மோசமான அரசியலாகும். அத்தகைய அரசியலை நாங்கள் முன்னெடுக்க விரும்பவில்லை. நாகரிகமான அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் பணம் தவெகவுக்குச் சென்றதா அல்லது இடைத்தேர்தலில் செலவிடப்பட்டதா என்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட விரும்பவில்லை.
இருப்பினும், இந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் முதலாவது குற்றம்சாட்டப்படுபவராகவும், சந்தேகத்துக்குரிய நபராகவும் அமைச்சர் சரத் உள்ளார். அவர் தவெக நிர்வாகி. அவர் பயன்படுத்தும் ஒரு பொருள் சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரியசாமி என்பவர் தவெக நிர்வாகியாக உள்ளார். மூன்றாவதாக, ஈரோடு மாவட்டம் பவானியில் அருண் என்பவரிடமிருந்து 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே நான்கு வருடம் சிறைத்தண்டனையில் இருந்தவர். அவரை ஸ்டேஷன் பெயிலில் விட்டிருக்காங்க” எனத் தெரிவித்தார்.
