செய்தியாளர்களை மிர*டிய த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலன், அவரது கூட்டாளிகள் சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் பல கோடி ரூபாய் மதிப்பிலான 137 கிலோ உயர்க போதைப்பொருளைக் கடத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டது குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், தொலைக்காட்சி செய்தியாளர்களை தவெக நாகை நகர நிர்வாகி வாட்ஸ்அப் கால் செய்து மிரட்டல் விடுத்தார். 

அனைத்து செய்தியாளர்களும் ஒழுங்காக இருந்து கொள்ளுமாறும், இதுதான் உங்களுக்குக் கடைசி எச்சரிக்கை உன்னை காலி செய்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் சார்பாக அனைத்து பத்திரிகையாளர்களும் நாகை எஸ்பி கெல்கேர் பாலசந்திரை நேரில் சந்தித்து தவெக நாகை தெற்கு நகரச் செயலாளர் பாலு மீது புகார் மனு அளித்தனர். 

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி பாலு மீது நாகை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் செய்தியை வெளியிட்ட செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.