ஈக்வடாரில், பிரசங்கத்தின் போது பெரிய சிலுவை சாய்ந்து விழுந்ததில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த மதபோதகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் குவாகில் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு, கத்தோலிக்க பாதிரியார் பாட்ரியோ அல்பெர்டோ சாஞ்சஸ் மோலிநரி என்பவர் பலிபீடத்தின் முன்பு நின்று கொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
மரணம் குறித்தும், வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமானது அல்ல என்ற தலைப்பிலும் அவர் உரையாற்ற ஆரம்பித்தார். நாம் அனைவரும் ஒருநாள் இறந்துவிடுவோம், நமக்கான நேரத்தை செலவிடுவதை விட, கடவுளுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தார்.
சுவாரசியமான பேச்சை, அங்குள்ளோர் மெய் மறந்து ஆர்வமுடன் கேட்டுக் கொண்டு இருந்தனர். அவரின் பிரசங்கம் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. ஏராளமானோர் அதை பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது, திடீரென பின்னால் உள்ள பெரிய சுவர் அருகே வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட சிலுவையானது, பாதிரியார் பாட்ரியோ அல்பெர்டோ சாஞ்சஸ் மோலிநரி மீது சாய்ந்தது. விநாடிக்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் கீழே விழுந்த மோலிநரி எழுந்திருக்கவே இல்லை.
சம்பவத்தை பார்த்த பணியாளர்கள் அலறியபடியே ஓடினர். பாதிரியார் அசைவற்று கிடப்பதை கண்டு கதறி அழுதனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள குவாகில் மறை மாவட்டம், அவரின் நினைவாக திருப்பலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
