“உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்” – சிறையில் உள்ள சிஜேபி நிர்வாகிகளுக்கு அபிஜீத் தீப்கே கடிதம்!

எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் இது தொடர்பாகத் தொடர் போராட்டங்கள்  நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜந்தர் மந்தரில் சிஜேபியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சிஜேபி நிர்வாகிகளான அஷுதோஷ் ரன்கா மற்றும் செளரவ் தாஸ் ஆகியோரை காவல்துறையினர்  கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிறையில் 6 நாட்களாக இருக்கும் சிஜேபி நிர்வாகிகளாக அஷுதோஷ் ரன்கா மற்றும் செளரவ் தாஸுக்கு அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சில ஆண்டுகளுக்கு முன்பு, லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் அஷுதோஷ் மிக அதிக ஊதியம் பெறும் பணியில் இருந்தார், லட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருந்தார். சௌரவ், நாட்டின் சட்ட அமைப்பு குறித்து எழுதிக்கொண்டும், மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டும் இருந்தார். இருவருமே வெற்றிகரமான தொழில் வாழ்க்கையையும், நிதிப் பாதுகாப்பையும் கொண்டிருந்தனர். தாங்கள் கட்டமைத்துக்கொண்ட வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லா காரணங்களும் இருந்தன.

இருப்பினும், இந்த நாட்டை இன்னும் சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில், அவர்கள் அனைத்தையும் விட்டுவிடத் துணிந்தனர். தங்கள் வசதியான வாழ்க்கையை விட்டு வெளியேறவோ, வீதிகளில் இறங்கவோ, நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ளவோ, இறுதியில் சிறைக்குச் செல்லவோ அவர்களுக்கு எந்தவிதமான காரணமும் இருக்கவில்லை. ஆனாலும், அவர்கள் அதைச் செய்தனர். இவர்களிடம் நான் மிகவும் போற்றும் விஷயம் என்னவென்றால், வசதியான பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், தங்களை விடக் குறைந்த வசதி கொண்டவர்களுக்காகப் போராட இவர்கள் முன்வந்ததே ஆகும். அவர்கள் எளிதாகவே கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம், தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்திருக்கலாம். தாங்கள் ஒருபோதும் சந்தித்ததே இல்லாத மக்களின் போராட்டங்களைப் பற்றிச் சற்றும் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. இத்தகைய தியாகங்களைச் செய்யுமாறு அவர்களிடம் யாரும் கேட்கவில்லை, யாரும் அதை எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனாலும் அவர்கள் அவற்றைச் செய்தனர். ஏனெனில், தங்களைத் தாண்டி மற்ற மனிதர்கள் மீதும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தது. என்னைப் பொறுத்தவரை, அது ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய குணம். நீங்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்று ஆறாவது நாள். என் சகோதரர்களே, நான் உங்களை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நீங்கள் இருவரும் இல்லையென்றால், சிஜேபி அடைந்த சாதனைகளில் பாதியைக் கூட அது அடைந்திருக்க முடியாது என்று நான் உண்மையாகவே கருதுகிறேன். மேலும், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் இந்த இயக்கத்திற்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புகள் குறித்து இன்னும் அதிகமான மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்தத் தொலைபேசி மீண்டும் ஒலிக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். விரைவில் திரும்பி வாருங்கள், என் சகோதரர்களே” என உருக்கமாக எழுதியுள்ளார்.