முதல் 6 மாதம் வரை குழந்தைகளுக்கு சர்க்கரைக்கு தடை.. உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய பரிந்துரை!

சென்னை: பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையம் (FSSAI) பரிந்துரைத்துள்ளது.

6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ், பிரக்டோஸ் ஆகிய சர்க்கரை வகைகளைச் சேர்ப்பதற்குத் தடை விதிக்க FSSAI பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FSSAI வெளியிட்டுள்ள இந்த புதிய வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினர் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசத்திற்குள் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி விதிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பிறந்தது முதல் 24 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான பல்வேறு வகை குழந்தை ஊட்டச்சத்துப் பொருட்களுக்கு, விரிவான ஊட்டச்சத்துக் கலவை, தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே உடல் பருமன் மற்றும் அது சார்ந்த இதர சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்திலேயே செயற்கை சர்க்கரைகளைத் தவிர்ப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.