அதே இலவச ரேஷன் அரிசியை, மலிவு விலை எனக் கூறி ரூ. 30-க்கு விற்பதா? தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

தமிழக அரசு கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலையில் அரிசி வழங்குவதாகக் கூறி இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் கொடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சந்தையில் உயர்ந்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு, ரேசன் கடைகள் மூலம் கிலோ ரூ. 30 என்ற மானிய விலையில் சன்ன ரக அரிசி விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழக அரசு இந்தத் திட்டத்திற்காக 25,000 மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 250 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நுகர்வோர் அல்லது குடும்ப உறுப்பினரும் அதிகபட்சமாக 5 கிலோ வரை சன்ன ரக அரிசியை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இலவச ரேசன் அரிசியை சன்ன ரக அரிசி என விற்பதாக புகார் எழுந்துள்ளதாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

இதுதான் சாமானியர்களுக்கான அரசா? 

விண்ணை முட்டும் விலைவாசியும், உயரும் அரிசி விலையும் சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக சேலத்தில் தமிழக அரசு கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலையில் அரிசி வழங்குவதாகக் கூறி இலவச ரேஷன் அரிசியையே மீண்டும் கொடுத்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

கடந்த கால தி.மு.க ஆட்சிக்கு நாங்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் த.வெ.க அரசின் செயல்பாடுகள் மக்களுக்கான அரசாக அல்லாமல் பொதுமக்களை வாட்டி வதைக்கும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருப்பது இந்த அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது.

மீண்டும் கூறுகிறேன்! இது மக்களுக்கான மாற்றம் தரும் அரசு அல்ல! ஏமாற்றம் தரும் அரசு. இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார். 



Source link