மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 4 பேர் உயிரிழந்ததால் நீடிக்கும் பதற்றம்!

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், மெல்ல மெல்ல வன்முறை நிகழ்வுகள் குறைந்தது.

அதன் பின் கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த 2025 ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஓராண்டாக அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், மணிப்பூரின் புதிய முதல்வராக பா.ஜ.க மூத்த தலைவரான யம்நம் கெம்சந்த் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி அம்மாநில முதல்வராக யம்நம் கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறார்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக அமைதி நிலவி வந்த நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் வன்முறை தலைதூக்கியுள்ளது. இன்று காலை முதல் குக்கி மற்றும் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. விறகு சேகரிக்க சென்ற இருவர மற்றொரு தரப்பினர் தாக்கியதால் இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் உயிரிழந்த சடலங்களை முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே கிராம மக்கள் விட்டுச் சென்றதால் அங்கும் பெரும் பதற்றமும் பரபரப்பும் நீடித்து வருகிறது. இந்த மோதலை தடுக்க போலீசார் மற்றும் ராணுவம் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளானர்.