அந்துமணி பதில்கள் – 20.10.2026

எஸ். பேபி ஷகீலா, சென்னை:

கட்சி தாவியவர்களின் வெற்றி, ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என, தி.க., தலைவர் கி.வீரமணி புலம்பல் பற்றி?

யாரு வீரமணியா… அவரும், ‘உள்ளேன் ஐயா’ என, மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஏதேதோ கூறி வருகிறார்… விட்டு விடலாம் பேபி!

–எம்.வெண்ணிலா, திண்டுக்கல்:

டில்லியில் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளதே?

அதுவும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் என்றும் கூறியிருந்தால், நம் பட்டாசு தொழிலாளிகளின் தீபாவளியும் சிறப்பாக அமையும்; சீன பட்டாசுகளின் வியாபாரம் இந்தியாவில் குறையும்.

கார்ட்டூன் உண்டு

வி.சிவபரமு, தஞ்சை:

‘கம்யூனிஸ்ட்களுக்கு எப்போதும் அழிவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியையும், தொண்டர்களையும் அழிக்கவே முடியாது’ என்கிறாரே அதன் செயலர் சண்முகம்!

கரப்பான்பூச்சிகள் போல் சண்முகம் தங்களை, ‘கொசு’ என்று சித்தரிக்கிறார் போலிருக்கிறது… ‘டெங்கு’ கொசுவாக இல்லாமல் இருந்தால் சரி!

உ.பார்த்திபன் ஜெயகுமார், துாத்துக்குடி:

ஈ.வெ.ரா., திருவள்ளுவர் இருவரும் தமிழகத்தின் ஆளுமைகள் என கூறிய, ராகுலின் நினைவில் காமராஜர் வராமல் போனது ஏன்?

ராகுலுக்கு காங்கிரசின் வரலாறே தெரியாது என்பதால், இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி எனும், ‘செலக்டிவ் அம்னீஷியா’ போலும்!

கி.நாகராஜன், சாத்துார்:

‘கிராமசபை கூட்டத்தில், மதுக்கடைக்கு போக மாட்டோம் என ஏன் தீர்மானம் நிறைவேற்றுவதில்லை?’ என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளதே?

ராமநாதபுரத்தில் பொதிகுளம், நாகப்பட்டினத்தில் விழுந்தமாவடி, துாத்துக்குடியில் காயல்பட்டினம் ஆகிய கிராமங்களில், மது குடிக்க மாட்டோம் என, கிராம மக்களே சபதம் ஏற்று, அதன்படி செயல்பட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றம் சொன்னது போல், இப்படி ஒரு தீர்மானம் ஒவ்வொரு கிராம சபையிலும் நிறைவேற்றி, அதை, ‘குடிமகன்’கள் பின்பற்றினால், ‘டாஸ்மாக்’குகள் தன்னால் மூடப்படும்.

கார்ட்டூன் உண்டு

ஆர்.அபிேஷகமணி, கடலுார்:

‘த.வெ.க., அரசு மீது அரசு ஊழியர்களுக்கு உள்ள அதிருப்தியே, தபால் ஓட்டுகளில் அக்கட்சி, மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது’ என, தி.மு.க., ஸ்டாலின் கூறுவது பற்றி?

தி.மு.க., தோற்றதற்கான காரணத்தை ஆராயாமல், திசை திருப்புகிறார் ஸ்டாலின். மக்களிடம் இந்த சப்பைக்கட்டெல்லாம் இனி எடுபடாது.

Source link