மான்செஸ்டர்: கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில், ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் (ஜூன் 11 – ஜூலை 19) நடக்கவுள்ளது. அதிகபட்சமாக 52 பேர் நடுவராக (‘ரெப்ரி’) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், அமெரிக்காவின் டோரி பென்சோ, மெக்சிகோவின் காட்டியா கார்சியா என, 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இரண்டாவது முறையாக (2023, 2026), ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்தில் பெண் நடுவர் களமிறங்க உள்ளனர். தவிர பென்சோ, 2023ல் நடுவராக செயல்பட்டார்.
ஜெர்மனி வீரருக்கு ஜெயம்
மான்டி கார்லோ: மொனாகோவில், மான்டி கார்லோ ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-7, 6-3 என பிரேசிலின் ஜோவா போன்செகாவை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் அகுர்-அலிசியாமியை தோற்கடித்தார்.
எக்ஸ்டிராஸ்
* ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு (ஜூலை 23 – ஆக. 2) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கான வீல்சேர் கூடைப்பந்து (3X3) போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
* ஷிம்லாவில், தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 19 வயதுக்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் அசத்திய இந்தியாவின் பிரியானுஜ் பட்டாச்சார்யா, புனித் பிஸ்வாஸ், ஜெனிபர், அனன்யா, நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
* பீஹாரில் நடக்கும் சப்-ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசனுக்கான அரையிறுதியில் உ.பி., அணி 6-2 என, பஞ்சாப் அணியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் மத்திய பிரதேச அணி 4-2 என, டாமன்-டயூ அணியை வென்றது.
* இந்திய ஜூனியர் பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து இந்தியாவின் துஷார் காந்தேகர் நீக்கப்பட்டார். புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் டிம் ஒயிட் நியமிக்கப்பட்டார்.
* சென்னையில் நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் (ஏப். 11) சென்னை, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, 6 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, 3 தோல்வி என, 5 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது.
