சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில், நகைகளை எடுத்து செல்ல, தகுந்த விதிகள் அல்லது நிலையான

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில், நகைகளை எடுத்து செல்ல, தகுந்த விதிகள் அல்லது நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, பிரபல நகைக்கடை சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, சட்டப்படி பரிசீலிக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், நகைகள் போன்றவற்றை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில், நகைகளை எடுத்து செல்ல, தகுந்த விதிகள் அல்லது நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, தங்கமயில் ஜுவல்லரி சார்பில், சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நகைக் கடை தரப்பில், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், உரிய ஆவணங்கள் வைத்திருந்தும், எங்கள் நிறுவன நகைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பின்னர்தான், அந்த நகைகள் மீண்டும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, வர்த்தகம் மற்றும் நிதி இழப்பு ஏற்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘பறிமுதல் செய்யப்படும், நகை, பணம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால், ஒரே நாளில் அவை திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், இது சம்பந்தமாக விதிகள் வகுக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது’ என்றனர்.

இதையடுத்து, மனுவை திரும்ப பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை திரும்பப் பெற அனுமதித்த நீதிபதிகள், ‘தேர்தலுக்குப் பின், இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு மனுதாரர் மனு அளிக்கலாம்; அதை தேர்தல் கமிஷன் சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.

Source link