பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அந்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை அவரது தங்கை கிம் யோ-ஜாங் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் பரவியுள்ளதையடுத்து, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஸியே வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கிம் ஜாங் உன் தீவிர மூளை ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் வடகொரியாவுக்கு ரகசியமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அந்நாட்டு அரசு வெளியிடாமல் மறைத்து வருகிறது.
கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜூ-ஏ வசம் ஆட்சி செல்லாமல், அவரது தங்கை கிம் யோ-ஜாங் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். வடகொரியாவில் உள்நாட்டுக் குழப்பம் வெடிக்காமல் தடுக்க 9,000 சீனப் படைகள் பியாங்யாங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தத் தகவல்களை, வடகொரிய அரசு, சர்வதேச அமைப்புகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்தும், அவர் மரணம் குறித்தும் பல்வேறு தகவல்கள் பரவி, பின் அது வதந்தி என உறுதியானது குறிப்பிடத்தக்கது.
