-நமது நிருபர்-
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மும்பை வருகை தந்துள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மஹாராஷ்டிரா அரசு, திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா ஆகியோர் வரவேற்பளித்தார்.
இந்தியா – யுஏஇ இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகிய இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழ்நிலைகள், உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானை மும்பைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. அவருடனான பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
