தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்துட்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10-04-26) தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர், “பழனிசாமியின் ஓனர் ஒன்றிய பா.ஜ.க அரசு, தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறது. அதில், தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி நிறைய பெருகி வருவதாகவும், அப்படி பெறுகிற காரணத்தினால் பல்வேறு பிரச்சனைகள் உருவாவதாகவும், அதனால் தமிழ்நாடு அரசு நெல்லுக்கு வழங்கி வருகிற ஊக்கத்தொகைய மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். என்ன கொடுமை பாருங்கள். மொத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என அறிவுறுத்தி ஒன்றிய அரசு நமக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டை சார்ந்தவர் என மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கிற நிர்மலா சீத்தாராமன் அவருடைய நிதி அமைச்சகம் இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறது.
உண்மையிலேயே தமிழர் என்ற உணர்வு இருந்தால் இதற்காவது பழனிச்சாமி வாய் திறந்து அவர்கள் ஓனரான பாஜகவை கண்டிப்பாரா? வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தால் பா.ஜ.கவை கண்டிக்க எடப்பாடி தயாரா? இல்ல, அசிங்கமாக வழக்கம் போல் அவதூறு மட்டும் பேச தான் வாய் திறப்பாரா? விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய துரோகம். நான்காண்டு காலம் முதலமைச்சராக இருந்த போலி விவசாயி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு உணவளிக்கக்கூடிய வேளான் பெருமக்களுக்கு மாநில அரசு வழங்குகிற நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஒரு ரூபாய் கூட அவர் உயர்த்தி தரவில்லை. பச்சை துண்டை போட்டுக்கிட்டு பழனிசாமி விவசாயிகளுக்கு பண்ணதெல்லாம் பச்சை துரோகம்.
போலி விவசாயியான பழனிசாமி ஆட்சி செய்த லட்சணம் இந்த அளவுக்கு இருக்கும் போது பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்திருக்கிறார். மோடி வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகளின் தலையில் இடியை இறக்கிருக்கிறார். பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில் தான் ஒன்றிய அரசுடைய மொத்த கவனமும் இருக்கிறது. தேர்தலின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கொண்டு வந்து இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்களுடைய வாக்குரிமையை பறித்தார்கள். அதை முடித்துவிட்டு தமிழ்நாட்டில் தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் நியமித்து தேர்தலில் தில்லுமுல்லு செய்யலாம் என நினைக்கிறார்கள். எத்தனையோ தேர்தல்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது. அமைதியான தேர்தலுக்கு தமிழ்நாடு தான் பெஸ்ட் எக்ஸாம்பிள். அப்படிபட்ட நம் மாநிலத்தில் முதல் முறையாக தேர்தலை காரணம் காட்டி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடம் மாற்றிருக்கிறார்கள். இவ்வளவு பயம் ஏன் உங்களுக்கு?” என்று விமர்சித்தார்.
