துணை நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்!

மறைந்த பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் (வயது 37) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இளம் வயதிலேயே கார்த்திக் சபேஷ் உயிரிழந்த செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கார்த்திக் சபேஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை வளசரவாக்கம் மயானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷ், தனது சகோதரர் முரளியுடன் இணைந்து ‘சபேஷ்–முரளி’ என்ற பெயரில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றவர். தமிழ் சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இந்த இசையமைப்பாளர் கூட்டணி, பல வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளது. 

கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சபேஷ் காலமானார். அவரது மறைவால் குடும்பத்தினர் துயரத்தில் இருந்த நிலையில், அன்மையில் இசையமைப்பாளர் தேவா மறைவு, தற்போது  கார்த்திக் சபேஷும் உயிரிழந்திருப்பது குடும்பத்தினருக்குப் பேரிழப்பாக அமைந்துள்ளது. மறைந்த கார்த்திக் சபேஷ் தமிழ் திரைப்படங்களில் நடிகராகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். ‘தம்’, ‘வல்லவன்’, ‘குளிர் 100’, ‘பட்டத்து யானை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே அறிமுகமானார். அதிலும் குறிப்பாக, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படத்தின் மூலம் அவர் கவனம் பெற்றார்.