நாகர்கோவில்:”துாத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டை டி.வி.யில் பார்த்துக் தெரிந்து கொண்டதாக கூறிய இபிஎஸ்க்கு, சட்டம் – ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை,” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அவர் பிரசாரம் செய்தார். பின் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழகத்தில் 1996ல் ஏற்பட்ட எழுச்சியால் அ.தி.மு.க., இரண்டு, மூன்று இடங்களை கூட பெற முடியாமல் போனது. அதுபோன்ற ஓர் எழுச்சியை இப்போது பார்க்கிறோம். தி.மு.க., கூட்டணி 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற போகிறது. பா.ஜ.,வால் தமிழகத்தில் நேரடியாக காலூன்ற முடியாது என்பதால் தான், அ.தி.மு.க.,வை ஒரு திரையாக மறைத்து கொண்டு, அக்கட்சியினர் நுழைய முயல்கின்றனர்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் இபிஎஸ், முதல்வராக இருந்து, போலீஸ் மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருந்தபோது, துாத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி டி.வி.யை பார்த்து தான் தெரிந்து கொண்டதாக கூறினார். அப்படிப்பட்டவருக்கு தி.மு.க., ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று கூற தகுதியில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நடந்ததெல்லாம் அ.தி.மு.க., ஆட்சியில் தானே ?
முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து, இபிஎஸ் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதை காங்., வன்மையாக கண்டிக்கிறது. இபிஎஸ், அரசியலில் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். தலைவர்கள் பற்றி தரக்குறைவாக பேசுவதும், அவதுாறு பரப்புவதும் ஒரு ஜனநாயகவாதிக்கு அழகல்ல. பா.ஜ.,வினரின் அரசியல் பற்றி தெரியாமல், அவர்களின் தயவில் இபிஎஸ் சவாரி செய்து கொண்டிருக்கிறார். பா.ஜ., வுக்கு பன்முகம் இல்லை; அவர்களுக்கு இருப்பது கோரமுகம் மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
