எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ
டாடா குழுமத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் செல்வாக்கு செலுத்தும் டாடா அறக்கட்டளைகளுக்குள் மோதல் அதிகரித்து வரும் நிலையில், சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை (SDTT), மகாராஷ்டிரா அறக்கட்டளைகள் ஆணையரிடம் திங்கள்கிழமை தனது பதிலைத் தாக்கல் செய்தது. தனது அறங்காவலர்களான வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அந்த அறக்கட்டளை மறுத்துள்ளது.
புகார்களுக்குப் பதிலளிக்க அறக்கட்டளைக்கு நீட்டிக்கப்பட்ட அவகாசத்தின் கடைசி நாளான அக்டோபர் 19-ஆம் தேதி இந்தப் பதில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, முன்மொழியப்பட்டுள்ள ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (IPO) முன்னதாக, டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிறுவன விதிமுறைகளை (Articles of Association – AoA) மறுஆய்வு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா அறக்கட்டளைகள் தரப்பில் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். டாடா சன்ஸ் நிறுவனத்தில் 27.98 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகத் தெரிகிறது. வேணு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகிய இருவரும் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மூலம் டாடா குழுமத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ள டாடா அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் தொடர்பான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தப் பதில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குழுமத்தின் முதன்மை ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் மற்றொரு முக்கியப் பங்குதாரரான சர் ரத்தன் டாடா அறக்கட்டளை (SRTT), 23.56 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது.
நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்த புகார்கள்
அறக்கட்டளைகளின் செயல்பாடுகளில் நிர்வாகக் குறைபாடுகள் இருப்பதாகவும், தனது அறக்கட்டளை சார்ந்த பணிகளின் வரம்பை மீறிச் செயல்படுவதாகவும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் வணிக விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதாகவும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை மீது வேணு ஸ்ரீனிவாசனும் விஜய் சிங்கும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் செப்டம்பர் 25, 2026 அன்று மகாராஷ்டிரா அறக்கட்டளைகள் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
அறக்கட்டளையின் பங்கு தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் சுயாதீன முடிவெடுக்கும் நடைமுறைகளில் தலையிட முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர்கள் தங்கள் புகார்களில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை கூட்டங்களை நடத்தவும் முடிவுகளை எடுக்கவும் தடை விதித்து, மகாராஷ்டிரா அறக்கட்டளைகள் ஆணையர் அலுவலகம் ஒருதரப்பு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. எதிர்தரப்பின் வாதங்களைக் கேட்பதற்கு முன்பாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவு ஒருதரப்பு உத்தரவு எனப்படுகிறது. இந்த உத்தரவால் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்குழுக் கூட்டம் (AGM) தடைபட்டுள்ளது.
அறக்கட்டளைகள் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகார்கள், டாடா அறக்கட்டளைகளுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை ஒழுங்குமுறை அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளன. நாட்டின் மிகப்பெரிய நிறுவனக் குழுமங்களில் ஒன்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அறக்கட்டளைகளின் நிர்வாகம், முடிவெடுக்கும் நடைமுறைகள் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
எஸ்டிடிடி தாக்கல் செய்த பதில் ஏன் முக்கியம்?
தனது சொந்த அறங்காவலர்கள் இருவர் அளித்த புகார்களுக்கு சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை அதிகாரபூர்வமாகப் பதிலளித்திருப்பது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதன் மூலம், புகார்களில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் அறக்கட்டளையின் பதிலையும் பரிசீலித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நிலைக்கு அறக்கட்டளைகள் ஆணையர் அலுவலகம் வந்துள்ளது.
டாடா அறக்கட்டளைகளுக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான உறவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களையும் இந்த விவகாரம் வெளிப்படுத்துகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அறக்கட்டளைகள் கொண்டுள்ள பங்குகள், டாடா குழுமத்தின் மீது அவற்றுக்குக் கணிசமான செல்வாக்கை வழங்குகின்றன. அதேநேரத்தில், அவற்றின் அறப்பணிச் செயல்பாடுகள் தனித்துவமான சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளுக்கு உட்பட்டவை.
எனவே, அறக்கட்டளைகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான மோதல் நீடித்தால், அதன் தாக்கம் அறக்கட்டளைகளுடன் மட்டும் நின்றுவிடாது. டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பிலும் அதன் விளைவுகள் எதிரொலிக்கக்கூடும்.
குற்றச்சாட்டுகளை எஸ்டிடிடி மறுத்துள்ள நிலையில், புகார்களில் முன்வைக்கப்பட்டுள்ள அம்சங்களும் அதற்கான பதிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும். புகார்களை எவ்வாறு கையாள்வது, அறக்கட்டளைகளின் செயல்பாடுகள் தொடர்பாக மேலும் ஏதேனும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமா என்பதை மகாராஷ்டிரா அறக்கட்டளைகள் ஆணையர் அலுவலகம் மேற்கொள்ளும் அடுத்தகட்ட பரிசீலனை தீர்மானிக்கும்.
