தமிழ் சினிமாவில் தேனிசை தென்றல் என்ற அடைமொழியுடன் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இசையமைப்பாளர் தேவா, ரஜினி படத்திற்காக 20 நிமிடங்களில் ஒரு பாடலை ஒருவாக்கி, அரைநாளில், அதை ரெக்கார்டிங் செய்து ஷூட்டிங்கிற்காக அனுப்பி வைத்துள்ளார்.
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவா. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இவர் தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்டார். பாடல்கள் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்ட தேவா, 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை, 1995-ல் வெளியான பாட்ஷா உள்ளிட்ட சில ரஜினி படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதில் ரஜினிகாந்த் – தேவா இணைந்த முதல் படம் அண்ணாமலை. இந்தியில் வெளியான குட்ஹர்ஸ் என்ற படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, சரத்பாபு, மனோரமா, நிழல்கள் ரவி, ராதாரவி, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார். கே.பாலச்சந்தர் படத்தை தயாரித்திருந்தார். அண்ணாமலை படம் பெரிய வெற்றியை பெற்றதற்கு இந்த படத்தின் இசையும் பாடல்களும் முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
இந்த படத்தின் கம்போசிங் நடந்துகொண்டிருந்தபோது திடீரென தேவாவுக்கு போன் செய்த தயாரிப்பாளர் கே.பாலச்சந்தர், நாளை ரஜினி குஷ்பு கால்ஷீட் கிடைத்திருக்கிறது. ஒரு டூயட் பாடல் வேண்டும் என்று சொல்ல, சார் இது ரொம்ப பெரிய படம் ரஜினி சார் நடிக்கிறார் நீங்கள் தயாரிக்கிறீங்க, இப்படி ஒரு பாடல் கேட்டால் எப்படி என்று தேவா கேட்க, உன்னால முடியும் தேவா, நாளை காலை 7 மணிக்கு நான் கவிஞர் வைரமுத்து எல்லோரும் ஸ்டூடியோவுக்கு வருகிறோம். எல்லாம் தயாராக வைத்துக்கொள் என்று பாலச்சந்தர் கூறியுள்ளார்.
அன்று இரவு பாடல் எப்படி உருவாகும் என்று தெரியாத தேவா, 25 வயலின் உட்பட, பல இசைக்கலைஞர்களை சொல்லி அழைத்து வந்துள்ளார். அதன்பிறகு காலை 7 மணிக்கு வைரத்து வந்தவுடன் டியூனை போட, 20 நிமிடத்தில் அந்த பாடல் ரெடியாகியுள்ளது. அதன்பிறகு மதியம் 1 மணிக்கு அனைத்து ரெக்கார்டிங் பணிகளும் முடிந்துவிட, 3 மணிக்கு எஸ்.பி.பி கே.எஸ்.சித்ரா பாடி முடித்துள்ளது, இந்த பாடல் தான் ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் என்ற பாடல். இந்த தகவலை தேவா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
