வாஷிங்டன்: லெபனான் அரசுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதித்ததை அடுத்து, போர் நிறுத்த பேச்சுக்கு அமெரிக்காவும், ஈரானும் தயாராகி வருகின்றன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், சர்வதேச நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறையும் -ஏற்பட்டது. இதில் அமெரிக்காவும் தப்பவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதை திறக்க, 10 அம்ச நிபந்தனைகளை ஈரான் முன்வைத்தது. தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், போரை நிரந்தரமாக நிறுத்தவும், ஈரானும், அமெரிக்காவும் அமைதி பேச்சு நடத்த ஒப்புக்கொண்டன. இது தொடர்பான பேச்சு, பாக்., தலைநகர் இஸ்லாமாபாதில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் இஸ்லாமாபாதுக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், ஈரான் மீது போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அமைதி பேச்சுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக, லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட வேண்டும் என, ஈரான் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு, இஸ்ரேல் மறுப்பு தெரிவித்து வருகிறது. லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் நீடித்தால், அமைதி பேச்சில் பங்கேற்க மாட்டோம் என ஈரான் மிரட்டல் விடுத்தது.
அமைதி பேச்சு சுமுகமாக நடக்க, லெபனான் அரசுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இது, அடுத்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அமைதி பேச்சுக்கு அமெரிக்கா – ஈரான் ஆகியவை தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல், லெபனான் அரசுடன் மட்டுமே பேச்சு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது; ஹெஸ்பொல்லாவுடன் அல்ல. உறவை மேம்படுத்தும் வகையில், லெபனானுடன் பேச்சை விரைவில் துவங்கும்படி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
