திருவள்ளூர்: சினிமாவை நம்பி போடும் ஓட்டு வீணாகிவிடும் என திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் இபிஎஸ் பேசினார்.
திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை சாலை, ஜெயநகரில் இபிஎஸ் பேசியதாவது: நான் கனிமொழியை தரக்குறைவாக பேசிவிட்டேன் என்று பேட்டி கொடுக்கிறார்கள். என்ன பேசினேன் என்று கேட்டால், சொல்லவில்லை. சொல்லுங்கள், நான் பதில் சொல்லத் தயார். விஷயத்தை மடைமாற்றுகிறார்கள். 5 வருடமாக என்னைப் பற்றித்தான் பேசினார்கள், ஓட்டுப்போட்ட மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை, 24 மணி நேரமும் இபிஎஸ் பற்றித்தான் பேசுகிறார்கள். உண்மையை எடுத்துச்சொன்னால் அவதூறு பரப்புகிறார்கள்.
இன்னொரு கட்சி புதிதாக முளைத்திருக்கிறது. உங்களை படிக்க வைத்தது நாங்கள், ஆல்பாஸ் போட்டது நான். இதன்மூலம், எப்படி தேர்வெழுதி எப்படி அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம்? என்று ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது. எங்களை மறக்கலாமா?
சீருடை, சைக்கிள், லேப்டாப் எல்லாம் கொடுத்தது அதிமுக. எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு பலனை அங்கே கொடுக்கலாமா? திரைப்படம் பாருங்கள், ரசியுங்கள். அதோடு விட்டுவிடுங்கள். கனவு காண்கிறோம், கண் விழித்தால் கனவு காணாமல் போயிடும், அதுபோல்தான் திரையுலகம். அதை நம்பி ஓட்டுப் போட்டால் அந்த ஓட்டுதான் வீணாகும். இளைஞரின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சி பற்றி இருக்க வேண்டும். நாங்கள் வாழ்ந்து முடித்தவர்கள், நீங்கள் வாழப்போகிறவர்கள். ஒவ்வொரு இளைஞரும் சிந்திக்க வேண்டும். நீங்கள் போடும் ஓட்டால் தமிழகம் வளம் கொழிக்கும் நாடாக மாறவேண்டும்.
ஒரு பிரச்னை வந்தது, 72 நாட்கள் ஆளைக் காணோம். எவ்வளவு பிரச்னை வந்தாலும் கட்சியைக் காப்பதுதான் தலைவருடைய கடமை. உண்மையைத்தான் பேசுகிறேன். உங்கள் வாக்கு சாதாரணமானது அல்ல. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றால் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள், நாடு காப்பற்றப்படும்.உயிர் நீத்த பின்னரும் நன்மை செய்த ஒரே தலைவர் எம்ஜிஆர், நிறைய பேசலாம் வேண்டாம். புதியவர் வரட்டும் பார்க்கலாம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
கடனில் தத்தளிக்கிறது தமிழகம்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேரடி, காந்தி சாலையில் இபிஎஸ் பேசியதாவது; சட்டசபையில் நான் பெரும்பான்மை நிரூபிக்கும்போது எனக்கு எதிர்த்து ஒருவர் ஓட்டுப் போட்டார். ஜெயலலிதா அமைத்த ஆட்சிக்கு துரோகம் விளைவித்து, எதிரிகளோடு சேர்ந்து வாக்களித்தார். ஒன்றாக இணையலாம் என்று கட்சியினர் சொன்னார்கள், அதனால் அவரை சேர்த்துக்கொண்டு, தலைமை பொறுப்பும், துணை முதல்வர் பதவியும் கொடுத்தோம். அதன் பிறகும் எதிரிகளோடு சேர்ந்து கூட்டு சதி செய்தார்.
2021 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்பட்டார். இப்படிப்பட்டவர் எங்கே போய் சேர்ந்திருக்கிறார்,.? ஒரு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ஆகி, துணை முதல்வர் என்ற பெரிய பதவி கொடுத்தும் அவருக்கு ஆசை அடங்கவில்லை. அதனால் தீய சக்தி திமுகவோடு சேர்ந்துவிட்டார். எம்ஜிஆர் திமுகவை வேரோடு ஒழிக்கச் சொன்னார், அப்படிப்பட்ட கட்சியில் சேர்வதற்கு வெட்கம் இல்லையா..?
பாஜவுக்கு அடிமை, சீட்டை அள்ளிக் கொடுத்துவிடுவார் என்று அவதூறு பரப்பினார்கள். திமுகவும் காங்கிரசும் 20 நாட்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், மாறி மாறி பேசினார்கள். ஆனால், அதிமுகவில் 2 மணி நேரத்தில் பேசி கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்தோம். அறிவித்தோம். எதிரிகள் கூட மூக்கு மேல் விரல் வைத்து பாராட்டும் அளவுக்கு கூட்டணி அமைத்தோம்.
மதிமுகவில் ஒருவர் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, அழுதுகொண்டே சிரிக்கிறேன் என்றார். திருமாவளவன் புலம்புகிறார், இல்லையெனில் கட்சியை உடைத்துவிடுவார்கள். இறுதியில் அறிவித்ததால் தான் தகுந்த வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லையாம். இப்படியெல்லாம் அங்கு குழப்பம் நிலவுகிறது.
இன்று ஒரு பத்திரிகை பேட்டி எடுத்தனர், எப்படி 2 ஆயிரம் கொடுப்பீர்கள் கடன் அதிகமாக இருக்கிறதே என்று கேட்டனர், ஆளத்தெரியாதவர்கள் ஆண்டால் கடன் தான் வரும். ஆளத்தெரிந்தவர் ஆண்டால் திட்டங்கள் கிடைக்கும்.மோடிக்கு இபிஎஸ் கொத்தடிமை, முரட்டு அடிமை என்கிறார் உதயநிதி. உங்கள் தாத்தா என்ன சொல்லி இருக்கிறார் என்று பாருங்கள். குஜராத்தை சிறப்பாக மேம்படுத்திய மோடி மிகவும் நல்லவர், கருணாநிதி பரபரப்பு பேட்டியாம். அவர் மோடிக்கு சர்டிபிகேட் கொடுத்துவிட்டு போய்விட்டார். இது தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள், ஆதாரத்தோடு சொல்றோம். இன்னும் நிறைய இருக்கிறது,
உதயநிதி அதிகம் பேசுகிறார். இபிஎஸ் காலை பிடித்தார் என்கிறார். தமிழக கலாச்சாரம், பதவி கிடைத்தால் ஆசி வாங்க வேண்டும். ஆசி பெறுவது பெருந்தன்மை. இது பாரம்பரிய நிகழ்வு. இதுகூட தெரியாமல் போட்டோ காட்டுகிறார். நான் இந்த இடத்தில் இருப்பதற்கு ஜெயலலிதா தான் காரணம். எங்களுக்கு வாழ்வு கொடுத்தவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். அவர் காலைத் தொட்டு வணங்குவதில் என்ன தவறு..? இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
