திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாய்ந்த வில்வ மரம்; மீண்டும் உயர்பெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சம்பந்த விநாயகர் சன்னதி அருகே ஸ்தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. அதை பக்தர்கள் சிரத்தையுடன் வழிபடுவர். அதேபோல, பிடாரி அம்மன் சன்னதிக்கு எதிரே 100 ஆண்டுகள் பழைமையான வில்வ மரம் இருக்கிறது. அதனருகே, 25 ஆண்டுகளுக்கு முன்னர் துளிர்விடத் தொடங்கிய அரச மரம், நாளடைவில் வில்வ மரத்துடன் பின்னிப்பிணைந்து வளர்ந்தது. இந்த வில்வ மரத்தில் சித்தர்கள் வாழ்வதாகவும், பல்லி ரூபத்தில் தங்கியுள்ளதாகவும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. மேலும், அந்த மரத்தடியில் நின்று மனமுருக வேண்டி, மரத்தின் உச்சியை பார்ப்பவர்களுக்கு பல்லி ரூபத்தில் சித்தர்கள் காட்சியளிப்பதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் உயர்பெற்ற வில்வ மரம்

இந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் பெய்த கனமழையால், வில்வ மரம் அடியோடு பெயர்ந்து சாய்ந்தது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான பக்தர்கள் `மரத்தை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்ப வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, அறநிலையத்துறையினர் வனத்துறையினருடன் இணைந்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, கிரேன் உதவியுடன் மரத்தை வேரோடு தூக்கி நிறுத்தி, அதற்கு மீண்டும் உயிர் தரும் பணிகள், நேற்று முன்தினம் இரவு பரிகார பூஜைகளுடன் தொடங்கியது. தீவிர முயற்சிக்குப் பின்னர், அதே இடத்தில் தூக்கி நிறுத்தி நடப்பட்டு மீண்டும் துளிர்விடச் செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source link