சென்னை: சாம்சங் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய மார்க்சிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகி முத்துக்குமார் கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் சிறையில் அடைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்தாண்டு பணியாற்றிய தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரதிநிதி முத்துக்குமார் தலைமையில் நடந்தது. தமிழக அரசின் தலையீட்டுக்கு பிறகு, இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த முத்துக்குமாரை பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளதாகவும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலர் சண்முகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எஸ்எச் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக கடந்த மார்ச் 27 ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். முத்துக்குமார் மட்டும் வேறொரு இடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். முத்துக்குமார் ஜாமினில் வெளியில் வந்து விடக்கூடாது என்பதற்காகவே பன்னாட்டு நிறுவனங்களின் தூண்டுதலின் பேரில் பழைய வழக்குகள் இருப்பதாகச் சொல்லி அவரை மீண்டும், மீண்டும் போலீசார் கைது செய்து வருகின்றனர். அரசியல் சாசனம் வழங்கியுள்ள சட்ட மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டிய போலீசார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவகம் செய்யக் கூடியதாக மாறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரியாக பொறுப்பு ஏற்பவர்கள் பன்னாட்டு மற்றும் இந்திய பெரும் நிறுவனங்கள் விரும்புவதையும், சொல்வதையும் செய்யக் கூடியவர்களாக இருப்பது போலீஸ் துறை மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பழிவாங்கும் உணர்ச்சியோடு போலீசார் நடப்பது சட்டவிரோத செயல் மட்டுமல்ல, மனித உரிமை மீறலாகும். சாதாரண குற்றப்பிரிவுகளில் போடப்பட்டுள்ள வழக்குகளில் கூட, நீதித்துறை நடுவர் பிணையை மறுத்து வருவது சரியல்ல. முத்துக்குமார் உள்ளிட்டோரை நிபந்தனையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துக்குமாரை அடுத்தடுத்து கைது செய்வதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் சண்முகம் தெரிவித்துள்ளார்.
