டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்திக்கு மேல் கண்காணிப்பை முடித்து, தன் இருப்பிடம் திரும்பிய அமெரிக்காவின், ‘எம்.க்யூ., 4சி’ என்ற 1,800 கோடி ரூபாய் மதிப்பிலான ட்ரோன் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு ட்ரோனான எம்.க்யூ., 4சி டிரைட்டன், அந்நாட்டின் விலை உயர்ந்த ட்ரோன். ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் பறந்து கண்காணிப்பை முடித்து, இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமான தளத்திற்கு நேற்று திரும்பியது.
இந்த ட்ரோன், 7700 என்ற அவசரகால சிக்னலை அனுப்பி விட்டு, கீழ் நோக்கி இறங்க துவங்கியது. எச்சரிக்கையை விடுத்த சிறிது நேரத்திலேயே மாயமானது. ட்ரோன் மாயமாவதற்கு முன்பு வரை ரேடாரில் இருந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. ட்ரோன் விபத்துக்குள்ளானதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை. இது குறித்த அமெரிக்க படைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
