முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு : தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு சம்மன்!

சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னை கவுன்சிலருமான சுதா தீனதயாளன் என்பவர், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். 

முதல்வர் விஜய்யை அவர் விமர்சித்திருந்த போது மேடையில் அமர்ந்திருந்த மேயர் பிரியா சிரித்துக் கொண்டும், கனிமொழி முகம் சுழிந்துக் கொண்டும் இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் நிர்வாகியின் பேச்சுக்கும், அவரது பேச்சை கண்டிக்காமல் இருந்த மேயர் பிரியா மற்றும் கனிமொழிக்கும் தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் நேற்று (19.10.2026), த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். 

அந்த மனுவில், “கடந்த 07.10.2026 அன்று மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா துறைமுக பகுதி செயலாளர் முரளி என்பவரால் ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்விழாவில் தி.மு.க.வை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவைத் தலைமை ஏற்று உரையாற்றிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலர் சுதா தீனதயாளன் என்பவர் பேசும்போது தமிழக முதலமைச்சர் விஜய் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இரு தரப்பினர்களிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ளார். 

எனவே சுதா தீனதயாளன் மற்றும் இவ்விழாவை ஏற்பாடு செய்த முரளி ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு  விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதா தீனதயாளனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.