கொல்கட்டா: ”பயிற்சியில் தினமும் 100 முதல் 150 சிக்சர் வரை அடித்த அனுபவம் கைகொடுத்ததால், சாதிக்க முடிந்தது,” என முகுல் சவுத்ரி தெரிவித்தார்.
கொல்கட்டா ஈடன் கார்டனில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, கொல்கட்டா மோதின. லக்னோ அணி , 16 ஓவரில் 128/7 ரன் எடுத்து தவித்தது. கடைசி 24 பந்தில் வெற்றிக்கு 54 ரன் தேவைப்பட்டன. அப்போது முகுல் சவுத்ரி மிரட்டினார். இவர், 7 சிக்சர், 2 பவுண்டரி என 54 ரன் விளாச, லக்னோ அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.
முகுல் சவுத்ரி 21, கூறுகையில்,”எனது அரைசதத்தை தந்தை தலிப்புக்கு சமர்ப்பிக்கிறேன். ஏனெனில், அவரது திருணமத்துக்கு முன்பே தன் மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் கனவு கண்டுள்ளார். தோனியின் பேட்டிங்கை ரசிப்பேன். அவரைப் போல ‘ஹெலிகாப்டர் ஷாட்’ அடிக்க, பயிற்சி செய்துள்ளேன். தோனியின் ‘பினிஷிங்’ திறன் மிகவும் பிடிக்கும். யார்க்கர் பந்துகளாக இருந்தாலும், சிக்சர் அடிப்பார். தற்போது அவரைப் போன்று விளையாடுகிறேன்.
அதிவேகமாக ‘ஷாட்’ அடிக்கும் முறை எனது ரத்தத்தில் கலந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக தினமும் 100 முதல் 150 சிக்சர் வரை பயிற்சியில் விளாசுகிறேன். இதற்கான பலன் கிடைத்துள்ளது,”என்றார்.
புதிய அடையாளம்
கிரிக்கெட் வாழ்க்கையை மிகவேகப்பந்து வீச்சாளராக துவக்கிய முகுல் சவுத்ரி, பின் விக்கெட் கீப்பரானார்.
கடந்த 2025, டிச. ல், டில்லிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி போட்டியின் கடைசி ஓவரில் 25 ரன் எடுத்து, ராஜஸ்தான் அணியை வெற்றி பெறச் செய்தார். இவரை ரூ. 2.60 கோடிக்கு லக்னோ வாங்கியது.
முகுல் கூறுகையில்,” ஏற்கனவே கடைசி ஓவரில் 25 ரன் எடுத்து வென்ற அனுபவம் இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடினேன். தற்போதைய வெற்றி புதிய அடையாளத்தை தந்துள்ளது,” என்றார்.
