சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாத காரணத்தினால், அணியில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் பணியில், தற்போது தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, முக்கியமான வீரர், முக்கியமில்லாத வீரர் என்ற பாகுபாடு பார்க்கலாம், திறமையை மட்டும் அடிப்படையாக வைத்து, பேட்டிங் வரிசையை கட்டமைக்கும் பணியில், தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த சீசனில் 123 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டும் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை, டிரேடிங்கில் அனுப்பிவிட்டு, தரமான மிடில் வரிசை பேட்டரை வாங்கலாம் என தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் முடிவு செய்து, மகேந்திரசிங் தோனியிடம் தெரிவித்ததாகவும், இதனைத் தொடர்ந்து, இருவரும் இதுகுறித்து 9 அணிகளுடனும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றாக, பார்மில் இருக்கும் மிடில் வரிசை பேட்டர்களை விட்டுக்கொடுக்க எந்த அணியும் முன்வரவில்லையாம். குறிப்பாக, டெல்லி கேபிடல்ஸிடம் இருந்து கே.எல்.ராகுலை வாங்கி, மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட்டை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே முயன்றதாகவும், ஆனால், அதற்கு டெல்லி கேபிடல்ஸ், துவக்கத்திலேயே திட்டவட்டமாக, முடியாது எனத் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், ஐபிஎல் 2027 சீசனின், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு கடைசி வாய்ப்பினை கொடுத்துப் பார்க்க ஜாகீர் கான் முடிவு செய்துள்ளார். அதுவும், முதல் 4 போட்டிகள் மட்டுமே. இந்த முதல் 4 போட்டிகளில் பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில், பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றால், ருதுராஜ் கெய்க்வாட்டை ஓரங்கட்டிவிட்டு, மாற்றாக டாப் ஆர்டரில் உர்வில் படேலை விளையாட வைக்க ஜாகீர் கான் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு, அடுத்த சீசனின்போது 30 வயதாகிவிடும். இவர், சமீப காலமாகவே அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால், அடுத்த சீசனில், குறிப்பிட்ட காலத்திற்குள் திறமையை நிரூபிக்கவில்லை என்றால், ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், அவரை அணியில் இருந்து விடுவிக்கவும் சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இருக்கிறார்கள். இதனால், சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்க நிர்வாகம் தயங்குகிறது. காரணம், அவரது வயதுதான். சாம்சனுக்கு, அடுத்த சீசனின்போது 32 வயதாகிவிடும். இவரால், நீண்ட காலத்திற்கு கேப்டனாக இருக்க முடியாது.
அதேநேரத்தில், ஆயுஷ் மாத்ரேவுக்கு தற்போது 19 வயதுதான் ஆகிறது. இவரை கேப்டனாக நியமித்தால், அடுத்த 10 வருடங்களுக்கு கேப்டன்ஸி பிரச்சினை இருக்காது. மேலும், ஆயுஷ் மாத்ரேவுக்கு, இந்திய யு19 அணியை வழிநடத்திய அனுபவமும் இருக்கிறது. இப்படி, இரண்டு வீரர்களுக்கு இடையில், அடுத்த கேப்டனுக்கான ரேஸ் நடந்து வருகிறது.
இருப்பினும், ஐபிஎல் 2027 சீசனுக்கான துவக்கத்தில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருப்பார். இவர், நான்கு போட்டிகளில் பெரிய ஸ்ட்ரைக் ரேட், பெரிய ரன்களை அடிக்கவில்லை என்றால், உடனே பிளேயிங் 11-ல் இருந்து விடுவிக்கப்படுவார். அதன்பிறகு, இடைக்கால கேப்டனாக சாம்சனை நியமித்து, ஐபிஎல் 2028 சீசனில் இருந்து ஆயுஷ் மாத்ரேவுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
