காஜியாபாத்: போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓடிய கைதி, லாரி மோதி பலத்த காயமடைந்தார். இந்தச் சம்பவத்தில், அலட்சியம் மற்றும் கடமையில் இருந்து தவறிய 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட நான்கு போலீஸ்காரர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்-பட்டு உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டம் பாத்லா நகர் ஊராட்சி ஒப்பந்த ஊழியர் அமித் குமார்,35. கடந்த, 7ம் தேதி இரவு பொது இடத்தில் மூன்று நண்பர்களுடன் மது அருந்தினார்.
வாக்குவாதம் அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த மோதிநகர் போலீஸ் உதவி கமிஷனர் பாஸ்கர் வர்மா, மது அருந்திய நான்கு பேரையும் கண்டித்தார். ஆனால், அவர்கள் உதவி கமிஷனருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, நான்கு பேரும் நிவாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விசாரணைக்கு பின், அமித் குமார் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அமித், முராத்நகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, போலீஸ் ஜீப்பில் இருந்து அமித் குதித்து தப்பி ஓடினார்.
டில்லி – -மீரட் நெடுஞ்சாலையை நோக்கி ஓடியபோது, எதிரில் வந்த லாரி அமித் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அமித், நேரு நகர் யசோதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமித் தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்து அமித் காயம் அடைந்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த போலீசார், லாரி விபத்தை மறைத்தனர்.
ஆனால், கிராம மக்கள் மற்றும் அமித்தின் உறவினர்கள் போலீசார் கொடூரமாக தாக்கியதால் பலத்த காயம் அடைந்ததாக குற்றம் சாட்டி, நிவாரி போலீஸ் ஸ்டேஷன் மும் நேற்று முன் தினம் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் போலீஸ் உயர் அதிகாரிகள், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி சார்பில், காஜியாபாத் போலீஸ் கமிஷனர் ரவீந்திர கவுடிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
கைதியை அழைத்துச் செல்லும் போது அலட்சியமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேந்திரா, ஷாஹித் கான், தலைமை போலீஸ்காரர் சச்சின் மோகன் மற்றும் கான்ஸ்டபிள் நரேந்திரா ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, காஜியாபாத் போலீஸ் துணை கமிஷனர் சுரேந்திர நாத் திவாரி நேற்று உத்தரவிட்டார்.
மேலும், நிவாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.கே.மவுரியாவிடம் துறை ரீதியான விசாரணை நடக்கிறது.
