புதுடில்லி: கிரிக்கெட் போட்டியில் சட்டவிரோத சூதாட்டம் நடத்திய, பா.ஜ., நிர்வாகி உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டியில் டில்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது, எந்த அணி வெற்றி பெறும் என்ற பந்தயத்தை சிலர் உருவாக்கினர். அதில், ஏராளமானோர் பணம் செலுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், 8-ம் தேதி மத்திய டில்லி கரோல் பாகில் திடீர் சோதனை நடத்தினர். பந்தயம் என்ற பெயரில் சட்டவிரோத சூதாட்டம் நடத்திய ஹிமான்ஷு, 30, அமன் ஜெயின்,34, ஆகாஷ் கார்க்,31, மற்றும் ஆஷிஷ் குமார்,35, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
பா.ஜ., நிர்வாகி அதேபோல், உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர்பாக பந்தயம் என்ற பெயரில் சூதாட்டம் நடத்திய பா.ஜ., நிர்வாகி பாங்கே பிஹாரி மற்றும் ஆதில், ரிஸ்வான், கிஷோர், முகேஷ், பாபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 1.6 லட்சம் பணம், 11 மொபைல் போன்கள், பந்தய விபரம் அடங்கிய மூன்று டைரிகள் மற்றும் லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.
