தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பொழுது 4-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் தாராபுரம் பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில், கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் பொழுது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தனுஷ் அரசியல் வருகைக்கு த.வெ.க வரவேற்பு; விஜய் சிறந்த உத்வேகமாக மாறியுள்ளதாக புகழாரம்
இதனைத் தொடர்ந்து, அதே நாளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் விஜய்யின் ரோட்ஷோ நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதாகவும் காவல்துறையினரை அவதூறாக பேசியதாகவும் கூறி தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வேட்பாளர் கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலை 6 மணி அளவில் விடுவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு குறித்த விசாரணையை தற்போது தாராபுரம் காவல் துறையினர் தொடங்கி உள்ளதாகவும், அந்த துவக்கத்தின் ஒரு பகுதியாக கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கோவையில் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து காலையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், இது குறித்து விரைவில் அவரிடமிருந்து ஒரு நல்ல பதில், வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அந்த பதில் அறிவிப்புக்கு பின்னர், கோவை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
