போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 14 மாதங்களில் 149 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் நாட்டில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கடந்த 2024ல் வெளியிடப்பட்ட, ‘இந்தியாவில் சிறுத்தைகளின் நிலை 2022’ என்ற அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் அதிகபட்சமாக 3,421 சிறுத்தைகள் இருந்தன.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சிறுத்தைகளின் இறப்பு நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் அஜய் துபே விபரம் கோரியிருந்தார். அவருக்கு மத்திய பிரதேச வனத் துறை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்தாண்டு ஜனவரி முதல் இந்தாண்டு பிப்ரவரி வரை, மத்திய பிரதேசத்தில் 149 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. இவற்றில், 31 சதவீத இறப்புகள் சாலை விபத்துகளால் நிகழ்ந்துள்ளன.
வயது முதிர்வு மற்றும் நோய் உள்ளிட்ட இயற்கை காரணங்களால், 24 சதவீத இழப்புகள் பதிவாகியுள்ளன.
வனவிலங்களுக்கு இடையிலான மோதலால், 21 சதவீத இழப்புகளும், வேட்டையாடுதல், பழிவாங்கும் சம்பவங்களால் 14 சதவீத இறப்புகளும் பதிவாகியுள்ளன. எட்டு சிறுத்தைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன.
இரண்டு சிறுத்தைகள் கண்ணி வெடிகளில் சிக்கி இறந்தன. ஒன்பது சதவீத வழக்குகளில், சிறுத்தைகள் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
