6 மாதத்தில் பொது சிவில் சட்டம், பெண்களுக்கு மாதம் ரூ.3,000: பா.ஜ.,

கொல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜ., வெளியிட்டது. ‘ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; குடும்பத் தலைவியருக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்’ போன்ற வாக்குறுதிகளை அக்கட்சி வழங்கி உள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முதற்கட்ட தேர்தல்

வரும் 23ல், 152 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், வரும் 29ல், 142 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமா ன அமித் ஷா வெளியிட்டார். ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இருண்ட காலம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், ”மேற்கு வங்க மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் தேர்தல் அறிக்கை உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜியின், 15 ஆண்டு கால ஆட்சி இருண்ட காலம் போன்றது. மேற்கு வங்கத்தை தங்க மாநிலமாக மாற்றி, இழந்த பெருமையை மீட்போம்,” என்றார்.

முக்கிய அம்சங்கள்
* ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
* குடும்பத் தலைவியருக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை
* 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை
* போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு, 15,000 ரூபாய் நிதியுதவி
* ஊழல் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்தவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு
* ஆட்சி அமைத்த 45 நாட்களுக்குள், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்
* நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிலுவைத் தொகைகள், 45 நாட்களுக்குள் வழங்கப்படும்
* காவல் துறை உட்பட அனைத்து மாநில அரசு பணிகளிலும், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்
* மதத்தை சுதந்திரமாக பின்பற்றுவதை உறுதி செய்ய தனி சட்டம் இயற்றப்படும் * சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்துவோம்
* எல்லை பகுதிகளில் மாடு கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
* ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் மாநில சுகாதார திட்டம் இணைக்கப்படும்
* மேற்கு வங்கத்தின் வட மாவட்டங்களில் எய்ம்ஸ், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., மற்றும் பேஷன் டிசைன் நிறுவனம் அமைக்கப்படும்
* வளர்ச்சியை ஊக்குவிக்க நான்கு புதிய நகரங்கள் உருவாக்கப்படும்
* மேற்கு வங்கத்தின் கலாசார பாரம்பரியத்தை போற்றும் வகையில், ‘வந்தே மாதரம்’ அருங்காட்சியகம் கட்டப்படும்
* திரிணமுல் காங்கிரசின், 15 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல்கள் மற்றும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்
* குர்மாலி மற்றும் ராஜ்பன்ஷி மொழிகள், அரசியலமைப்பின் எட்டா-வது அட்டவணையில் சேர்க்கப்படும்
* மேற்கு வங்கம் முன்னணி தொழில் மையமாகவும், மீன் ஏற்றுமதியில் முக்கிய இடமாகவும் மாற்றப்படும்.

Source link