தாராபுரம் இடைத்தேர்தலின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் அவரது கணவர் உட்பட 6 பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை இன்றைய தவெக அரசு அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் போடப்படும் வழக்குகளை எல்லாம் காட்டி, தங்களின் வன்மத்தை தீர்த்துக் கொள்ள இன்றைய வன்ம குடோன் ஆட்சியாளர்கள் இப்படிப்பட்ட பாசிசப் போக்கை கையாள்வது வெட்கக்கேடானது. ஒரு அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை கைது செய்ததன் மூலம், நாங்கள் எப்போதும் இவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய “சுயமோக நடத்தை (Narcissistic Behaviour)” -அதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளது ஜோசப் விஜய் தலைமையிலான ஆச்சரியக்குறி அரசு.
“ஒருவேளை உங்கள் வாகன அணிவகுப்பு (Convoy) செல்லும் போது மக்கள் யாராவது மனு கொடுக்க வந்தால், வண்டியை நிறுத்தி மனுவை வாங்குவீர்களா? அல்லது, உங்கள் கான்வாய்-க்கு குறுக்கே வந்தார்கள் என்று வழக்கு பதிந்து கைது செய்வீர்களா?” என்ற சந்தேகம் இப்படிப்பட்ட கைதுகளால் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா உள்ளிட்ட அக்கட்சியினர் மீதான கைது நடவடிக்கையினை கைவிட வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
