– நமது நிருபர் –
இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இன்று (அக்டோபர் 20) முதல் அமலுக்கு வந்துள்ளது. இது அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் முதல் நாளிலிருந்தே வரிவிலக்கு அளிப்பதோடு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் பலப்படுத்துகிறது. நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இன்றிலிருந்து, இந்தியாவுடனான நமது வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம், இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இன்றிலிருந்து, நியூசிலாந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறைந்த வரியில், நூறு கோடிக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடியும்.
நியூசிலாந்து பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யவும், அதிமான நபர்களை பணியில் அமர்த்தவும், முதலீடு செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும், ஊதிய உயர்வையும் பெற்றுத் தரும்; அதிக வருமானம் கிடைக்கும். நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு, இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களைச் சாத்தியமாக்கி இருக்கிறோம். வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.
நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு முக்கியமான நாள். இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆக்லாந்து (நியூசிலாந்து) துறைமுகங்களிலிருந்து அனுப்பப்படும் பொருட்கள், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவை, குறைந்த வரியில் சென்றடைய முடியும். இத்தகைய வர்த்தக ஒப்பந்தங்களை நாங்கள் மேற்கொள்வதற்கு இதுவே காரணம். இவ்வாறு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறியுள்ளார்.
