இடைத்தேர்தலில் தவெக அதிகார துஷ்பிரயோகம்: ஸ்டாலின்

சென்னை:

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

தாராபுரம் இடைத்தேர்தலில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தவெக அரசு கைது செய்தது கண்டனத்திற்குரியது. சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக தவெக அரசு நடக்கிறது.

இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நாதக நிர்வாகிகளை கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமினில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும், நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் தவெகவில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளை காப்பாற்றி, போராடுவோரை கைது செய்வதில் தற்போது இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டில்லி பாஜ இன்னொன்று தமிழகத்தில் தவெக! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source link