“ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க ரூ. 1 லட்சம் செலவு செய்கிறார்கள்” – முன்னாள் அமைச்சர் மெய்யநாதன்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி நெடுவாசல் கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவுள்ள பத்ரகாளியம்மன் கோயில் குளத்தை உள்ளூர் மக்கள் துணையுடன் கைஃபா இளைஞர்கள் தூர்வாரி உள்ளனர். குளம், வரத்துவாி தூர்வாரப்பட்ட நிலையில் ஒரு நாள் பெய்த மழையில் தண்ணீர் வரத் தொடங்கி உள்ளது. மேலும், கைஃபா அமைப்பினர் தூர்வாரும் நீர்நிலைகளில் நடுவில் குறுங்காடுகள், கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவது வழக்கமாக உள்ளது. 

அந்த அடிப்படையில் நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோயில் குளம் முழுமையாகத் தூர்வாரப்பட்ட நிலையில் கரை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியினை முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் எம்.எல்.ஏ உள்ளூர் பிரமுகர்கள், கைஃபா நிர்வாகிகள் முன்னிலையில் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசும் போது, நான் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் முதலில் பிரச்சாரத்தைத் தொடங்குவது இந்த பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபட்டு நெடுவாசலில் தான் பிரசாரம் தொடங்குவேன். 

அதே போல நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்த போது தமிழ்நாட்டில் வேறு இங்கும் இல்லாத அளவில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினோம். அந்த போராட்டம் தான் அந்த திட்டத்தை விரட்டியது. அதன் பிறகு திமுக அரசு வந்த பிறகு தமிழ்நாட்டில் எங்கேயும் கனிமங்களை எடுக்க முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கவில்லை.

கடந்த வாரம் பஹ்ரைனில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்றேன். மரக்கன்று நட்டேன். 1000 மரக்கன்றுகள் நடுகிறார்கள். அங்கே கடலில் மண் கொட்டி கட்டடங்கள் கட்டுகிறார்கள். நாம் காட்டை அழித்து கட்டடம் கட்டுவது போல அங்கே கடலை அழித்து கட்டடம் கட்டுகிறார்கள். ஆனால் மரக்கன்றுகள் வளர்க்க முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒரு மரக்கன்று வளர்க்க சுமார் ரூ.1 லட்சம் செலவு செய்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறார்கள் என்றார்.