“இரவு உடையுடன் என்னைக் கைது செய்துள்ளனர்” – கடும் கோபத்தில் பேசிய நாதக கார்த்திகா!

தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்றுகொண்ட போது, போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அத்தொகுதியின் நாதக வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளருமான கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா இன்று கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் உட்பட 6 பேரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட கார்த்திகா, கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகாவின் கைதுக்கு திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கார்த்திகா உள்ளிட்டோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக அவர்களை காவல் நிலையத்தில் இருந்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களை கண்ட கார்த்திகா போலீஸ் வாகனத்தில் நின்று கொண்டே அவர்களிடம் ஆவேசமாகப் பேசினார். அதாவது அவர், “நான் எந்த தவறும் செய்யவில்லை. காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த என்னை இரவு உடையுடன் அழைத்து வந்துவிட்டனர். இதுவரையிலும் நான் இங்கே தான் இருக்கிறேன். இது அராஜமாக இருக்கிறது. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இது போன்ற செயல்கள் செய்யப்படுகிறது.நான் என்ன குற்றம் செய்தேன்? பெத்தப்பெட்டமைன் விற்பவர்கள், கள்ளச்சந்தையில் சாராயம் விற்பவர்கள் தைரியமாக இருக்கிறார்கள்.

ஆனால் தாராபுரத்தில் போட்டியிட்ட என்னை எதற்கு கைது செய்திருக்கிறார்கள் என்பதையே சொல்லவில்லை. மக்கள் கோமாளிகள் கையில் ஆட்சியை கொடுத்திருக்கிறீர்கள். போராடுகிற நாங்கள் தெருவில் நிற்கிறோம். நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோமா? இறுதி நாள் ஆளுங்கட்சி மட்டும் தான் பரப்புரை செய்ய வேண்டும் என அனுமதி இருக்கிறதா? எங்கே போனாலும் விஜய் வருகிறார் என்று சொல்கிறார்கள், நாங்கள் வாக்கே கேட்கக்கூடாதா? காவல்துறையின் அராஜகம், மேல் இடத்தில் இருந்து அழுத்தம் வருகிறது என்கிறார்கள். மக்களுக்காக போராடக்கூடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்திருப்பது மிக மிக தவறு. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என ஆவேசமாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து கார்த்திகாவை போலீசார் மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.