அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் பேசுபொருளாக மாறிவிடுவது தற்காலத்தில் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சென்னை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து ஆயுத பூஜையைக் கொண்டாடியது மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திருமா, அனைவருக்கும் நெற்றியில் திருநீறு பூசினார். அப்போது, அருகிலிருந்த நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் ஆவேசமாகக் கத்தினார். அவர் அருகிலிருந்தவர்களிடம், ”அண்ணனின் (திருமா) நெற்றியைப் பார்த்தீர்களா?, அவரது நெற்றியில் திருநீறு பூசியிருக்கிறார் பார்த்தீர்களா?” என்று உற்சாகமாகக் கத்தினார்.
மேலும், இது தெரியாமல் அவர் திருநீற்றை அழித்துவிட்டார் என்று பலரும் அவதூறாகப் பேசிக்கொண்டிருக்காதீர்கள் என்று பேசினார். அந்த சமயத்தில், நடிகர் கூல் சுரேஷ்க்கும் திருமா திருநீறு பூசிவிட்டார். இது சம்பந்தமான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு விசிக தலைவர் திருமா சென்றிருந்தார். அப்போது, அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அந்த சமயத்தில், அவரது நெற்றியில் திருநீறு பூசப்பட்டது. பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த திருமாவிடம், செல்ஃபி எடுத்துக்கொள்ளப் பலரும் விருப்பம் தெரிவித்தனர். அப்போது, திருமா தனது நெற்றியிலிருந்த திருநீற்றை அழித்துவிட்டுப் போட்டோ எடுத்தார். அது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு, எதிர்க்கட்சியினர் சிலர் பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆயுத பூஜை விழாவில் கலந்துகொண்ட திருமா, தனது நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் திருநீறு பூசி விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில், திருமா திருநீறு பூசிவிட்டது குறித்து கூல் சுரேஷ் பேசியிருப்பதும் வைரலாகி வருகின்றது.
