புதுடில்லி: டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சர்ச்சையில் சிக்கிய அலகாபாத் உயர்

புதுடில்லி: டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சர்ச்சையில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடவடிக்கைக்கு பயந்து அவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

டில்லி உயர் நீதிமன்ற நீ திபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, 57, அங்குள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். கடந்தாண்டு மார்ச் 14ம் தேதி, இவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் போது, வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகளை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றினர்.

மாற்றம்

உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் வைக்கப்பட்டிருந்தது நாடு முழுதும் அதிர்வ லைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, துறை ரீதியாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிந்துரைத்தது.

இதற்கிடையே, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி லோக்சபா எம்.பி.,க்கள் 146 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 62 பேர் என, மொத்த 208 எம்.பி.,க்கள் சார்பில் பார்லி மென்டில் நோட்டீஸ் சமர்ப்பிக்கப்பட்டது.

லோக்சபாவில் நீதிபதியின் பதவி நீக்க தீர்மானம் ஏற்கப்பட்டதை அடுத்து, அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று பேர் அடங்கிய குழுவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்தார்.

இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, சபாநாயகர் ஓம் பிர்லாவால் அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய குழு நடத்தி வரும் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பதவியை யஷ்வந்த் வர்மா நேற்று ராஜினாமா செய்தார்.

வேதனை

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பி வைத்தார். அதில், ‘இந்தக் கடிதத்தை சமர்ப்பிக்க என்னை துாண்டிய காரணங்களை கூறி, உங்கள் மேன்மைமிகு அலு வலகத்துக்கு சுமை ஏற்படுத்த விரும்பவில்லை. ‘மிகுந்த வேதனையுடன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த பதவியில் பணியாற்றியது ஒரு கவுரவம்’ என, குறிப்பிட்டுள்ளார்.

பணமூட்டை விவகாரத்தில் பார்லிமென்ட் வாயிலாக, அவரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில், அதற்கு பயந்து தன் பதவியை யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்துள்ளதாக நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source link