மும்பை: வாடிக்கையாளர்கள், இனி 10,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு அனுப்பும்போது, ஒரு மணிநேரம் கழித்தே சென்றடையும் வகையிலான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஏமாந்து பணம் அனுப்புவதை தடுக்கும் வகையில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆர்.பி.ஐ., பரிந்துரை செய்துள்ளது.
இதன் விபரம்:
* டிஜிட்டல் முறையில் ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை அனுப்பும்போது, ஒரு மணிநேரம் கழித்தே சென்றடையும். இந்த இடைவெளியில் மோசடியை உணர்ந்தால், வாடிக்கையாளர்கள் அந்த பரிவர்த்தனையை ரத்து செய்துகொள்ள முடியும்
* முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 50,000 ரூபாய்க்கு மேற் பட்ட பணப்பரிவர்த்தனை களை மேற்கொள்ளும்போது, அவர்கள் முன்கூட்டியே நியமித்த ‘நம்பகமான நபரின்’ ஒப்புதலை பெறுவது கட்டாயமாக்கப்படும்
* ஆபத்து காலங்கள் அல்லது மோசடி நடப்பதாக சந்தேகிக்கும் நேரங்களில், வாடிக்கையாளர்கள் தங்களது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் ஒரே நொடியில் உடனடியாக முடக்கும் சிறப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த வரைவு விதிகள் குறித்து, பொதுமக்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து வரும் மே 8ம் தேதி வரை கருத்துகள் வரவேற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் பின், இறுதி வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |

