– நமது நிருபர் –
”தேர்தல் நேரத்தில் அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில்தான், மத்திய அரசின் மொத்த கவனமும் உள்ளது. தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்து, தேர்தலில் தில்லு முல்லு செய்யப் பார்க்கின்றனர்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தஞ்சாவூரில் நடந்த தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் ஆதரவு பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் மேலும் பேசியதாவது: சீர்காழி, கடலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் பிரசாரத்தை முடித்துவிட்டு, நான் சென்றபோது, அதிகாரிகள் ஒரு கடிதத்தை என்னிடம் காண்பித்தனர்.
பழனிசாமியின் ஓனரான மத்திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம் தான் அது. இப்படி கூட ஒருவரால் யோசிக்க முடியுமா என்பதை போல் அந்த கடிதம் அமைந்துள்ளது.
தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை காரணமாக, நெல் உற்பத்தி பெருகி வருகிறதாம். அதனால், பல்வேறு பிரச்னைகள் உருவாகிறதாம். எனவே, நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் துறையில் இருந்து, இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை எழுதியுள்ள மத்திய பா.ஜ., அரசை கண்டிக்க பழனிசாமி தயாரா? நான்காண்டுகள் முதல்வராக இருந்த போலி விவசாயி பழனிசாமி. அவர் ஆட்சியில் நெல்லுக்கான ஊக்கத்தொகையாக 1 ரூபாய் கூட உயர்த்தி வழங்கவில்லை.
அடுத்து அமைய உள்ள ஆட்சியில், நெல் கொள்முதலுக்கு 3,500 ரூபாய் வழங்குவோம். இதை தடுக்க பழனிசாமியும், பா.ஜ.,வும் முயற்சித்தால், அதை நான் முறியடிப்பேன்.
மோடி, வணிக சிலிண்டர் விலையை 203 ரூபாய் உயர்த்தி, வியாபாரிகள் தலையில் இடியை இறக்கியுள்ளார். இதனால், உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டன. டீ விலை 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், காபி விலை 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்ந்துள்ளன.
தி.மு.க., ஆட்சிதான் வேண்டும் என, எப்போதோ ஓட்டளிக்கப்போகும் மக்கள் முடிவு செய்து விட்டனர். இதை தேர்தல் கமிஷனும், பா.ஜ.,வும் உணராமல் உள்ளன. இப்படித்தான், 2021ம் ஆண்டு முதல்வராகும் யோகம் எனக்கு இல்லை; கட்டம் சரியில்லை என்றனர்.
தி.மு.க.,வில் இரண்டாவது முறையாக, தொடர்ந்து யாரும் முதல்வர் ஆனதில்லை என்கின்றனர். கடந்த முறை சொன்னதை உடைத்து முதல்வர் ஆனேன். இப்போது இரண்டாம் முறை இல்லை என்று சொல்வதையும் உடைக்கிறேன் பாருங்கள்.
நான் போய் சேர வேண்டும் என, தன் ஆழ்மன விருப்பங்கள், வக்கிரங்களை பழனிசாமி பேச ஆரம்பித்துவிட்டார். பழனிசாமியின் எண்ணம் பலிக்காது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
