– நமது நிருபர் –
வரி ஏய்ப்பு மற்றும் தேர்தலுக்காக பணம் பதுக்கல் தொடர்பாக எழுந்த புகார் அடிப்படையில், திருச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயங்கும் பிரபல ஜவுளி கடைகளில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம், ராமநாதபுரம், உதகை, திருச்சி, புதுக்கோட்டை, கடலுார் ஆகிய மாவட்டங்களில் இயங்கும் பிரபல ஜவுளி கடைகளில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம், நான்கு சாலையில் இயங்கி வரும் பிரபல ஜவுளி கடையில் நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம், அக்ரஹாரம் சாலையில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று காலை, 9:00 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள் கடையை பூட்டி சோதனை நடத்தினர். இதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி, என்.எஸ்.பி., சாலையில் உள்ள, பிரபல ஜவுளி கடையில் நேற்று காலை, 8:00 மணிக்கு, 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனால் நேற்று கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உதகை மாவட்டம், ஊட்டியில் உள்ள கடையில், நேற்று காலை, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர். புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையிலும் சோதனை நடந்தது.
வருமானவரி உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஜவுளி கடைகள் மற்றும் அவற்றின் கிடங்குகளில், வாக்காளர்களுக்கு விநியோகிக்க அதிகளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சில வாரங்களாக குறிப்பிட்ட ஜவுளி கடைகளில், வழக்கத்திற்கு மாறாக பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.
கணக்கில் வராத பணம் மற்றும் ஆன்லைன் அல்லாத நேரடி பணப்புழக்கம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடத்தப்பட்ட கடைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.
சில கடைகளில் ஜவுளி வியாபாரம் என்ற பெயரில் அரசியல் கட்சிகளுக்கு நிதி கைமாறியுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தேர்தல் முடியும் வரை இந்த கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
