சென்னை: ”ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சிக்கு துரோகம் இழைத்தவர் பன்னீர்செல்வம்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
காஞ்சிபுரம் தேரடியில், அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரத்தை ஆதரித்து பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
காஞ்சிபுரம் அ.தி.மு.க.,வின் கோட்டை. அண்ணாதுரை எந்த நோக்கத்திற்காக தி.மு.க.,வை துவக்கினாரோ, அது சிதைந்து விட்டது. குடும்ப ஆதிக்கத்தில் சிக்கி, அந்த கட்சி சின்னாபின்னமாகி விட்டது. தி.மு.க., கட்சியல்ல; கார்ப்பரேட் கம்பெனி.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கண்ட கனவை, அ.தி.மு.க., நனவாக்கி வருகிறது. வரும் தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்போது அப்பா ஸ்டாலினும், மகன் உதயநிதியும் வீதிகளில் எப்படி போவர் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தேன். அப்போது, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; நம்மோடு இருந்த ஒருவர், நமக்கு எதிராக ஓட்டளித்தார்; ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சிக்கு துரோகம் இழைத்தார். எதிரிகளோடு சேர்ந்து ஓட்டளித்தவர், இப்போது நம்முடன் இல்லை.
அ.தி.மு.க.,வில் இருந்தபோது, தொடர்ந்து எதிரிகளோடு சேர்ந்து நமக்கு எதிராக கூட்டு சதி செய்தார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நம்மோடு இருந்தாலும், தி.மு.க.,வுக்கு ‘பி டீமாக’ செயல்பட்டார்.
அவருடைய சுயரூபங்கள் வெளி வந்து, வெளியுலகிற்கு தான் யார் என்பதை அவரே அடையாளம் காட்டினார். அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பதவி கொடுத்த பின்னும் அவருக்கு ஆசை அடங்கவில்லை; தீய சக்தி தி.மு.க.,வோடு சேர்ந்து விட்டார்.
தி.மு.க.,வை வேரோடு ஒழிக்கச் சொன்னவர் எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த கட்சியில் போய் சேர்ந்துள்ளார் பன்னீர். அதற்காக அவர் வெட்கப்பட வேண்டும்.
தி.மு.க.,வினர் பிரசாரத்தில் நாகரிகமாக பேச வேண்டும். அரசியல் ரீதியாக பேசினால் பதில் தருவோம். தனி நபர் விமர்சனம் செய்தால், தி.மு.க.,வை விட 10 மடங்கு என்னால் பேச முடியும். என்னை மோடியின் அடிமை என்கிறார் உதயநிதி. அவரது தாத்தா கருணாநிதி, ‘குஜராத்தை சிறப்பாக மேம்படுத்திய மோடி மிகவும் நல்லவர்’ என மோடிக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
மோடியை பாராட்டி, ‘முரசொலி’யில் கருணாநிதி நிறைய எழுதியுள்ளார். அப்படிப்பட்ட மோடியை இன்று தி.மு.க., விமர்சிக்கிறது. என்னையும் பா.ஜ.,வையும் பற்றி பேச, தி.மு.க.,வுக்கு சரக்கில்லை. அதனால், வாயில் வந்ததை பேசுகின்றனர். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
