இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர்; முரண்பாடுகளுக்கு இடையே ஜெய்சங்கருடன் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தது. அதனால் இந்தியாவுக்கு அமெரிக்க அதிகர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரி விதிப்பை கொண்டு வந்தார். அதன் பின் இருநாட்டுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதால் அந்த வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். இந்த சூழலில், இன்று (20-10-26) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா வந்தடைந்தார்.

அரசு முறை பயணமாக மும்பை வந்த மார்கோ ரூபியோ, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அதில் இரு நாட்டுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வது, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு, ஈரான் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பல விஷயங்கள் குறித்து இருநாட்டு அமைச்சர்கள் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் மார்கோ ரூபியோ சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.