– நமது நிருபர் –
புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்றாவது மொழிக்கான பாடத்திட்டத்தை உருவாக்காத நிலையில், இன்னும் ஏழு நாட்களுக்குள் மூன்றாம் மொழியை கற்பிக்கும்படி, இணைப்பு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய பாடத்திட்ட கட்டமைப்பான, என்.சி.எப்.எஸ்.இ., பன்மொழித் தன்மையை ஊக்குவிக்கவும், இந்திய மொழிகளின் கலாசார புரிதலை வளர்க்கவும், ‘ஆர் 1, ஆர் 2, ஆர் 3’ என்ற அடிப்படையில் இரண்டு இந்திய மொழிகளை கற்பிக்க பரிந்துரைக்கிறது. அதன்படி, இந்த கல்வியாண்டு முதல், ஆறாம் வகுப்பில், மூன்றாவது மொழி எனும், ‘ஆர் 3’ கட்டாயமாகிறது.
இதன்படி, இந்திய அரசியலமைப்பில் உள்ள மொழிகளுக்கான அதிகாரப்பூர்வ பாடப்புத்தகங்கள் விரைவில் வழங்கப்படும். அதுவரை, உள்ளூர் புத்தகங்கள் அல்லது பொருட்களைக் கொண்டு பாடங்களை, ஒரு வாரத்துக்குள் துவங்க வேண்டும். ஆறாம் வகுப்பில், ஒரு பள்ளி எந்தெந்த மொழிகளை அறிமுகப்படுத்துகிறதோ, அந்த மொழிகளை மட்டுமே, 9, 10ம் வகுப்புகளிலும் மாணவர்களின் விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும்.
அதனால், பள்ளிகள் தாங்கள் தேர்ந்தெடுத்த, ‘ஆர் 3’ மொழியை, அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு தெரிவிப்பதுடன், ‘ஓயாசிஸ்’ இணையதளத்திலும் பதிவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னையில் உள்ள சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘இதுவரை, எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் மண்டல அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்றனர்.
மும்மொழி கொள்கையில், மத்திய அரசு அவசரமாக செயல்படக்கூடாது. முதலில் ஒவ்வொரு வகுப்பாக, பட்டியல் மொழிகளில் பாடப்புத்தகங்களை உருவாக்கி, ஆசிரியர்களுக்கு பயற்சி அளித்து, தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த அவகாசம் வழங்கி, அதன்பின் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் பலன் கிடைக்கும்.
-ஜெயப்ரகாஷ் காந்தி கல்வியாளர்
