ஏப்ரல் 11ம் தேதியான இன்று நம் அனைவருக்கும் மிகுந்த சிறப்பு வாய்ந்த ஒரு தினம். இந்தியாவின் மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரான மகாத்மா ஜோதிராவ் புலேவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது 200-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று தொடங்கவிருப்பதால், இந்நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த, 1827ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் மகாத்மா புலே பிறந்தார். எனினும், ஆரம்பத்தில் அவர் சந்தித்த துன்பங்கள், அவரது கற்றல், தைரியம், சமூகத்திற்கான அர்ப்பணிப்பிற்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை.
தலைசிறந்த சீர்திருத்தவாதி என்பதைக் கடந்து, மகாத்மா புலேவின் வாழ்க்கை துணிவு, இடைவிடாத தேடல் மற்றும் சமூக நலனுக்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
கற்றலும், கல்வியும் மகாத்மா புலேவின் லட்சியத்தின் மையமாக விளங்கின. ஞானம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புரிமை அல்ல, மாறாக பகிரப்பட வேண்டிய ஒரு ஆற்றல் சக்தி என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
அர்ப்பணிப்பு
சமுதாயத்தில் பலருக்கும் கற்றலின் இன்பம் மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில், அவர் பெண்களுக்கும், முறையான கல்வி பெற வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் முன்மாதிரியான பள்ளிகளைத் திறந்தார்.
கல்வி சார்ந்த அவரது தொலைநோக்குப் பார்வை, நமக்கு பெரிதும் எழுச்சியூட்டுகிறது. ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலிவடைந்தோரின் கண்ணியத்தை உறுதி செய்ய, அவர் பாடுபட்டார். அதே வேளையில், சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அவர் எடுத்தார்.
அவரால் நிறுவப்பட்ட சத்யசோதக் சமாஜம், நவீன இந்தியாவின் மிக முக்கியமான சமூக சீர்திருத்த இயக்கங்களில் ஒன்றாக திகழ்ந்தது. சமூக சீர்திருத்தம், சமுதாய சேவை மற்றும் மனித மாண்பை மேம்படுத்துவதில் இந்த இயக்கம் முன்னணியில் இருந்தது.
சமூக நல்லிணக்கம்
அவரது மனைவியான சாவித்திரிபாய் புலேவை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. நாட்டின் மற்றொரு தலைசிறந்த சீர்திருத்தவாதியும், ஆசிரியருமான அவர், பெண்களின் கனவுகளை நனவாக்க, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், பெண்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்பட தீவிரமாகக் குரல் கொடுத்தார்.
மகாத்மா புலேவின் மறைவுக்குப் பின், சாவித்திரிபாய் அந்த பணியைத் தொடர்ந்தார். கடந்த, 1897-ல் பிளேக் நோய் பரவியபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவை செய்ததன் விளைவாக, தாமும் அந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தெளிவும், பொது நோக்கமும் இணையும்போது, சமூகத்தின் சக்தி இந்தியாவில் அற்புதங்களை நிகழ்த்தும் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலேவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
அதனால்தான் அவர் இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆற்றல் அளிக்கிறார்; அவரது வார்த்தைகளும், செயல்களும் இன்றும் நம்பிக்கையைத் தாங்கி நிற்கின்றன. இந்த வகையில், 200 ஆண்டுகளுக்குப் பிறகும், மகாத்மா ஜோதிராவ் புலே, இந்தியாவின் எதிர்காலத்திற்கான ஒரு வழிகாட்டியாக திகழ்கிறார்.
